திங்கள், 6 ஜூன், 2011

தனுஷ்

நடிகர் தனுஷ் 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 பிறந்தார். இவரது இயற்பெயர் பிரபு. இவரின் தந்தை பிரபல தமிழ் இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆவார். இவரின் அண்ணன் செல்வராகவனும் ஒரு பிரபல இயக்குனர் ஆவார். தனுஷ் தமது அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவரின் இரண்டாவது படம் காதல் கொண்டேன், இப்படத்தையும் அவரது அண்ணன் செல்வராகவன் தான் இயக்கினார். தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி மணந்தார். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் பெயர் யாத்ரா ஆகும்.

1. துள்ளுவதோ இளமை - (தமிழ்) - 2002
2. காதல் கொண்டேன் - (தமிழ்) - 2003
3. திருடா திருடி - (தமிழ்) - 2003
4. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் - (தமிழ்) -2003
5. சுள்ளான் - (தமிழ்) - 2004
6. டிரீம்ஸ் - (தமிழ்) - 2004
7. தேவதையைக் கண்டேன் - (தமிழ்) - 2005
8. அது ஒரு கனாக்காலம் - (தமிழ்) - 2005
9. புதுப்பேட்டை - (தமிழ்) - 2006
10. திருவிளையாடல் ஆரம்பம் - (தமிழ்) - 2006
11. பரட்டை என்கிற அழகு சுந்தரம் - (தமிழ்) - 2007
12. பொல்லாதவன் - (தமிழ்) - 2008
13. யாரடி நீ மோகினி - (தமிழ்) - 2008
14. குசேலன் - (தமிழ்) (நட்புக்காக) - 2008)
15. படிக்காதவன் - (தமிழ்) - 2009
16. குட்டி - (தமிழ்) - 2010
17. ஆடுகளம் - (தமிழ்) - தயாரிப்பில்
18. மாப்பிள்ளை - (தமிழ்) - தயாரிப்பில்


ரஜினிகாந்த்

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 1950 வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் நாள், கர்நாடகாவில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ரமாபாய். இவர்களின் நான்காவது குழந்தையாக பிறந்தார் ரஜினிகாந்த். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் (ராமகிருஷ்ணா மிஷனின் அங்கம்)ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இதே சமயத்தில் பல மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.

நடிகராக விரும்பி சென்னைக்கு வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1975ஆம் ஆண்டு புத்தண்ணா கனகால் இயக்கிய 'கதா சங்கமா' என்ற கன்னட படத்தில் முதன் முதலாக நடித்தார். அதே ஆண்டில் தமிழில் கே பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முதன்முதலாக நடித்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து நடித்த மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி (1977), அவர்கள் (1977), 16 வயதினிலே (1977), காயத்ரி போன்ற படங்கள் அவரை மிகச்சிறந்த வில்லத்தனமான நடிப்பிற்காக நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் (1978), ஆறிலிருந்து அறுபது(1979) வரை போன்ற படங்கள் அவர் நாயகனாக நடித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. பில்லா, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களில் அவர் அதிரடி நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தில்லுமுல்லு படம் இவரை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக உலகுக்கு வெளிக்காட்டியது. பில்லா இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற 'டான்' படத்தின் தமிழாக்கம் ஆகும். அமிதாபச்சனின் பிற படங்களான குத்-தார், நமக் ஹலால், லாவாரிஸ், திரிசூல் மற்றும் கஸ்மே வாதே போன்ற படங்கள் முறையே படிக்காதவன், வேலைக்காரன், பணக்காரன், மிஸ்டர் பாரத் மற்றும் தர்மத்தின் தலைவன் போன்ற பெயர்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன. அவரின் 100 வது படமான ஸ்ரீ ராகவேந்திரர், சமயத்துறவி ராகவேந்திரரின் வாழ்க்கையைப் பற்றிய படமாகும்.

90களில் இவர் நடித்து வெளிவந்த அண்ணாமலை, பாட்ஷா, போன்ற படங்கள் இவரை சூப்பர் ஸ்டாராக மாற்றியது. இவ்விரு திரைப்படங்களும் இன்றளவிலும் திரையிடப்படும் இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முத்து படம் இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் அமோக வெற்றி பெற்றது. ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் முத்து தான். ரஜினிகாந்த் தாமே திரைக்கதை அமைத்த படம் வள்ளி 1993 ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இவர் நடித்து வெளிவந்த படம் படையப்பா மிகப்பெரும் வெற்றி பெற்றது. மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002ல் இவர் நடித்து வெளிவந்த பாபா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இருந்தாலும் அடுத்து 2005 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது.

ரஜினிகாந்த், தமிழ் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் பிலட் ஸ்டோன் (Blood Stone) (1988).

விருதுகள்

படையப்பா, பெத்தராயடு, பாட்ஷா, முத்து, அண்ணாமலை, தளபதி, வேலைக்காரன், ஸ்ரீ ராகவேந்திரா, நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், 16 வயதினிலே ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் ரஜினிகாந்த். புவனா ஒரு கேள்விக்குறி நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். வள்ளி படத்திற்காக சிறந்த திரைக்கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் விருதை வென்றுள்ளார்.

ரஜினிகாந்த் அவர்கள் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். விருதையும், 1995 ஆம் ஆண்டு ரஜனீஷ் ஆசிரமத்தின் ஓஷோபிஸ்மிட் விருதையும், 1995ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் கலைச்செல்வன் விருதையும், 2007 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசின் ராஜ் கபூர் விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அளித்து கௌரவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக