திங்கள், 6 ஜூன், 2011

வட இலங்கையில் புதிய ஒலிபரப்புக் கோபுரம்
<span title=புதிய கோபுரம்" height="152" width="203">

வட இலங்கையின் மாங்குளம் அருகே புதிய ஒலிபரப்புகளுக்கும் தொலைதொடர்புகளுக்குமான கோபுரம் ஒன்றை இலங்கை ஜனாதிபதி திறந்துவைத்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் வட இலங்கையில் வாழ்பவர்கள் தங்களுடைய அரசு வானொலி ஒலிபரப்பையும், தொலைக்காட்சி ஒளிபரப்பையும் மீண்டும் முழுமையான தெளிவுடன் பெற ஆரம்பித்துள்ளனர்.

இருபது வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்பு விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட ஒரு ஒளிபரப்புக் கோபுரம் நின்றிருந்த இடத்தில் இந்த புதிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்தபடி ஒலிபரப்பப்படும் இலங்கை அரசு மற்றும் தனியார் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் கடந்த இருபது வருடங்களாக தாங்கள் சரிவரக் கேட்டதும் பார்த்ததும் இல்லை என்று வட இலங்கையின் பெரிய ஊரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கேபிள் வழியாகவும் செயற்கைக்கோள் வழியாகவும் கிடைப்பெறக்கூடிய பெரும்பாலும் தென்னிந்திய சானல்களையே இம்மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்திருந்தனர்.

ஆனால் தற்போது 175 மீட்டர்கள் உயரம் கொண்ட பிரம்மாண்ட ஒலிபரப்புக் கோபுரம் திறக்கப்பட்டுள்ளதையடுத்து அந்நிலைமை மாறும் எனத் தெரிகிறது.

தவிர பொதுமக்களுக்கான இணையச் சேவை மற்றும் தொலைபேசி சேவைகளும் இந்த கோபுரம் வந்ததால் மேம்படும் என்று அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ தொலைதொடர்புகளுக்கும் இந்தக் கோபுரம் பயன்படுமாம். பெருமளவில் ஆயுதப் படையினராலேயே நிர்வகிக்கப்படுகின்ற வட இலங்கையில் இராணுவ தொலைதொடர்பு சேவைகள் வலுவாக இருப்பது அவசியம் என்று சொல்லலாம்.

இந்த இடத்தில் நின்றிருந்த முக்கிய ஒலிபரப்புக் கோபுரத்தை பலகாலம் முன்பே புலிகள் அழித்திருந்தனர் என்றாலும் இதே இடத்திலிருந்தபடிதான் அவர்கள் புலிகளின் குரல் வானொலி மூலம் தங்கள் பிரிவினைவாத பிரச்சாரத்தை சில ஆண்டுகள் முன்பு வரை செய்திருந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.


ராம்தேவ் போராட்டக் கலைப்பு சர்ச்சையில்...
இந்தியாவில் ஊழல் பிரச்சினை குறித்தும், சமீபத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் ஊழலுக்கு எதிராக சமீபத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை போலிசார் கையாண்ட விதம் குறித்தும் விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் ஒன்று கூட்டப்பட வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை இந்திய எதிர்க்கட்சிகள் கோரியிருக்கின்றன.

பாபா ராம்தேவ்
சனிக்கிழமை போலிசார் பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை தலைநகர் டில்லியிலிருந்து கலைத்து அப்புறப்படுத்த போலிசார் பலப்பிரயோகம் செய்தனர்.

அவர் தனது போராட்டத்தை ஹரித்துவாரில் உள்ள தனது ஆஷ்ரமத்தில் இருந்து மீண்டும் துவங்கப்போவதாக கூறுகிறார்.

இந்த போராட்டத்துக்கு எதிர்க் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் அரசின் மூத்த அமைச்சர்கள் சிலரை தொடர்புபடுத்திய ஊழல் விவகாரங்கள் வெளியானதற்குப் பின்னர், இந்தியாவில் ஊழலுக்கு எதிரான கோப உணர்வு பரவலாக இருக்கிறது.

அரசு பதில்

போராட்டத்தைக் கலைத்த போலிஸ் நடவடிக்கை குறித்து இந்தியாவில் அரசியல் ரீதியான சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது.

வி.நாராயணசாமி
அரசு இந்த போராட்டத்தைக் கையாண்ட விதம் மூர்க்கத்தனமானது, போலிஸ் நள்ளிரவில் இந்த போராட்டக் குழுவினரைக் கலைக்க பலப்பிரயோகம் செய்தது சர்வாதிகாரமானது என்று விமர்சனங்கள் வெளிவந்திருக்கின்றன.

இந்த விமர்சனம் குறித்து இந்திய நடுவண் அரசின் இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள் தமிழோசைக்கு அளித்த பேட்டியில், இது ஒரு சரியான விமர்சனம் அல்ல என்று கூறினார்.

இந்திய அரசு ஏற்கனவே கறுப்புப் பணத்தை கைப்பற்ற 147 நாடுகளுடன் ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது என்று நாராயணசாமி கூறினார்.

இது தவிர, சமீபத்தில் ஊழல் தொடர்பாக விசாரிக்க லோக் பால் ஒன்றை அமைப்பது குறித்து காந்திய ஆர்வலர் அன்னா ஹசாரே அவர்களுடனும் பேச்சு வார்த்தைகளை அரசு நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு வந்ததாகவும், ஊழல் ஒழிப்பு தொடர்பாக அரசு எடுத்துவந்திருக்கும் நடவடிக்கைகளை அவருக்கு விளக்கவே மூத்த அமைச்சர்கள் அவரை சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்த அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பாபா ராம்தேவ் கேட்ட அனுமதி போலிசாரால் மறுக்கப்பட்டதாகவும், ஆனால் யோகா செய்முறை விளக்க பயிற்சி முகாம் நடத்த ராம் லீலா மைதானத்தில் அவருக்கு வழங்கப்பட்ட அனுமதியை அவர் உண்ணாவிரதமாக மாற்றியதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

மேலும், இந்து மத அமைப்புகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடுருவ அனுமதித்ததன் மூலம், இந்த உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.

இதனால்தான், டில்லியில் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான மத்திய மாநில அரசுகள் போலிஸ் நடவடிக்கையை எடுக்க நேரிட்டது என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் , மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் செல்வாக்கை, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாதித்துவிடாதா என்று கேட்டதற்கு பதிலளித்த நாராயணசாமி, கறுப்புபணம் மற்றும் ஊழல் விஷயத்தில் 2004ம் ஆண்டு வரை மத்தியில் பதவியில் இருந்த பாரதிய ஜனதா அரசு என்ன செய்தது, மேலும் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடகா மாநில முதல்வர் எதியூரப்பா மீது எழுப்பப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள் குறித்து அக்கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்டார்.

முதலில் பாஜக தங்களைச் சரிசெய்துகொண்டு, பிறகு எங்கள் மீது குற்றம் சொல்லட்டும் என்றார் அவர்.

காங்கிரஸ் கூட்டணி அரசு, அதன் அமைச்சர்கள் ராசா, மராட்டிய முதல்வர் அசோக் சவான், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கல்மாடி ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவர்களை பதவி நீக்கம் செய்தது என்றும் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் நாராயணசாமி சுட்டிக்காட்டினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக